புதுச்சேரியில் நடந்த மெகா செஸ் போட்டியில், 12 வயது மாணவர் ஒரே சமயத்தில் 200 பேருடன் விளையாடி புதிய சாதனை படைத்தார். புதுச்சேரி குயவர்பாளையம் சுந்தர மேஸ்திரி வீதியைச் சேர்ந்த சையத் நயீம் - ஜரீனாபேகம் தம்பதியரின் மகன் முகமது ஜாவித்(12). உழவர்கரை பிரிம்ரோஸ் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். செஸ் விளையாட்டில் திறமை மிக்கவர். முகமது ஜாவித்தின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் 200 மாணவர்களுடன் விளையாடும் "மெகா செஸ் போட்டி' உழவர்கரை பிரிம்ரோஸ் பள்ளியில் நேற்று நடந்தது.
அதே பள்ளியில் பயிலும் ஐந்து வயது முதல் 14 வயது வரையுள்ள 200 மாணவ- மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். கல்வித்துறை இயக்குனர் சுந்தரவடிவேலு போட்டியைத் துவக்கி வைத்தார். காலை 11 மணிக்கு போட்டி துவங்கியது. பிரமாண்ட அரங்கில் நடந்த போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் எதிராக கவனமாகவும், நிதானமாகவும் சில நொடிகளில் காய்களை நகர்த்தி, எந்த டென்ஷனும் இல்லாமல் படிப்படியே எதிர்த்து விளையாடிய வீரர்களை வீழ்த்தினார். இரவு 7 மணிக்கு போட்டி முடிவடைந்தது.
போட்டியில் பங்கேற்ற 200 பேரில் 189 போட்டியாளர்களை வீழ்த்தினார். ஐந்து பேரிடம் தோல்வியைத் தழுவினார். ஆறு பேரிடம் போட்டியை சமன் செய்தார். முகமது ஜாவித்தை புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்க தலைவர் செல்வநாதன், செயலர் வீரமணி, பள்ளி இயக்குனர் லெஸ்லி ஜேக்கப், முதல்வர் ஜரினாபேகம் வாழ்த்தினர். புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.