Saturday, July 5, 2008

அமெரிக்க அணுசக்தி

அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்துப் போட அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன்' என்று மன்மோகன் சிங் சோனியாவையே அச்சுறுத்தினார் என்று செய்திகள் வந்தன. அணுசக்தி உடன்பாட்டில் இனியும் காலதாமதம் செய்யாது இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று வாரம் ஒருமுறை வாஷிங்டன் ஆலோசனை சொல்கிறது. அச்சுறுத்தவும் செய்கிறது. தமது பதவிக்காலம் முடிவதற்குள் இந்தியாவை அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக்கிட வேண்டும் என்று புஷ்ஷும் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒசாமா பின்லேடனை உயிரோடு பிடிப்பது - படை கொண்டு ஈரானை ஆக்கிரமிப்பது - இந்தியாவை தமது ராணுவக் கூட்டணி நாடாக்குவது ஆகியவையெல்லாம் புஷ்ஷின் பதவிக் கால லட்சியங்கள். இவற்றில் எதுவுமே நிறைவேறவில்லையென்றால், அவர்தான் என்ன செய்வார்? ஒசாமா பின்லேடனைப் பிடிக்க ஆப்கனிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கக் கூட்டணி ராணுவம் நல்லபடியாக உதை வாங்கிக் கொண்டிருக்கிறது. அவர் பாகிஸ்தான் மலைப் பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக அந்த நாட்டிற்குள்ளும் புகுந்து அந்த ராணுவம் குண்டு மாரி பொழிகிறது. அதனைப் பகிரங்கமாக பாகிஸ்தானே கண்டிக்கின்ற நிலை உருவாகி இருக்கிறது.


ஈராக் மீது படை கொண்டு செல்ல புஷ் சொன்ன அத்தனை காரணங்களும் பொய் என்று அமெரிக்க செனட் சபையே கண்டித்து இருக்கிறது. எனவே, ஈரானும் அணுகுண்டு செய்வதாகக் கூறி அமெரிக்க புஷ்ஷால் படைகளை ஏவ முடியவில்லை. ஈரானுக்கு ஆதரவாக ரஷியாவும் சீனமும் நிற்கின்றன.
எனவே, தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலையில் எப்படியாவது அணுசக்தி உடன்பாட்டில் இந்தியாவைக் கையெழுத்திடச் செய்யவேண்டும் என்று புஷ் துடித்துக் கொண்டிருக்கிறார். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அந்த உடன்பாடு ஏற்படவில்லையென்றால், வேறு யார் ஆட்சிக் காலத்தில் நிறைவேறும்? அந்தரங்கமாக நடமாடிக் கொண்டிருந்த அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை இடதுசாரிக் கட்சிகளும், தேச பக்த சக்திகளும் அம்பலத்திற்குக் கொண்டு வந்தன. அந்த உடன்பாடு எப்படி அமெரிக்காவிற்கு இந்தியா எழுதித் தரும் அடிமைச் சாசனமாக அமைந்திருக்கிறது என்பதனை எடுத்துக் கூறின.
அதற்கு இன்றுவரை பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் தரவில்லை. `அந்த உடன்பாட்டை ஏற்கெனவே ஒப்புக் கொண்டு விட்டேன். கையெழுத்திட வில்லையென்றால் இனி உலகம் நம்மை நம்பாது' என்கிறார்.

அந்த உடன்பாடு செயலுக்கு வரவில்லையென்றால், இந்தியாவே இருளில் மூழ்கிவிடும் என்று இன்னொரு பக்கம் பிரசாரம் நடைபெறுகிறது. இப்படி பக்க வாத்தியங்கள் பலமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சூழலில் மூன்று இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மீது சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். ஒருவர், கோபாலகிருஷ்ணன். இந்த அணு விஞ்ஞானி அணுசக்தியை எரிபொருளாகப் பயன்படுத்தும் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராகப் பணி செய்தவர். இன்னொருவர், பி.கே. அய்யங்கார். இந்த விஞ்ஞான மேதை அணுசக்தி ஆணையத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தவர்.அடுத்தவர், ஏ.என். பிரசாத். இவர் பாபா அணுமின் நிலைய ஆராய்ச்சித் துறையின் தலைவராகப் பணி செய்தவர்.


அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பற்றி சரியான தீர்ப்புச் சொல்ல தகுதி பெற்றவர்கள். `ஆராய்ந்து பார்க்காது அணுசக்தி உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடக் கூடாது' என்று இவர்கள் இந்த வாரம் எச்சரித்திருக்கிறார்கள். தலைசிறந்த இந்த மூன்று அணு விஞ்ஞானிகளும் சேர்ந்து கூட்டறிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள்.

`அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்துப் போடுவேன். இல்லையேல் பதவி துறந்து பரதேசம் போவேன்' என்று மன்மோகன் சிங் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் - தக்க சமயத்தில் இந்த மூன்று அணு விஞ்ஞானிகளும் எச்சரித்திருக்கிறார்கள்.
நாட்டின் நலன் மீது அக்கறையுள்ள ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்? இத்தகைய விஞ்ஞானப் பெருமக்களை அழைத்துப் பேசுவார்கள். உடன்பாடு எப்படிப் பாதகம் எனக் கருதுகிறார்கள் என்று விளக்கம் கேட்பார்கள்.

ஆனால், அத்தகைய நடைமுறைகளை மன்மோகன் சிங் அரசு கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இந்த மூன்று விஞ்ஞானிகளும் என்ன அரசியல்வாதிகளா? இடதுசாரிக் கட்சியினரா? இல்லை. அவர்கள் நாட்டுப் பற்றாளர்கள். எனவே, அமெரிக்க உடன்பாட்டின் அபாயத்தை எடுத்துச் சொல்கிறார்கள். சிந்தித்துச் செயல்படுங்கள் என்று எச்சரிக்கிறார்கள். `அமெரிக்கா நீட்டும் அணுசக்தி உடன்பாட்டில் இந்தியாவிற்கு எதிரான அம்சங்கள் பதுங்கியிருக்கின்றன. அறியாமல் உடன்பாட்டில் கையெழுத்திட்டால் இந்தியாவிற்குப் பேரிழப்பு ஏற்படும். எனவே, உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு மத்திய அரசு அவசரப்படக்கூடாது' என்று மூன்று மூத்த விஞ்ஞானிகளும் எச்சரித்திருக்கிறார்கள்.

இதனைத்தான் இவ்வளவு காலமாக இடதுசாரிக்கட்சிகள் சுட்டிக் காட்டி வருகின்றன. அந்த அபாயத்தை இப்போது அனுபவ முதிர்ச்சி பெற்ற அணு விஞ்ஞானிகள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆனால், உடன்பாட்டில் கையெழுத்துப் போடு போடு என்று அமெரிக்கா நச்சரிக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும் பேனா மூடியைத் திறந்து தயாராக இருக்கிறார். அப்படிக் கையெழுத்திட்டால் என்ன நிலை ஏற்படும்? பிள்ளை வரம் கேட்கப் போய் கணவனை இழந்த கதையாகிவிடும்.

இந்தியா அணுகுண்டு சோதனை செய்வதை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது. ஏற்கெனவே இந்தியா அணுகுண்டு சோதனை செய்தபோது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெரிக்காவிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன. அதனைவிட சக்தி வாய்ந்த அழிவு ஆயுதங்களை அந்த நாடு தொடர்ந்து தயாரித்து வருகிறது. அதற்கான சோதனைகள் நடைபெறுகின்றன.

அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்காக அமெரிக்கா உருவாக்கிய இஸ்ரேல் நாட்டிடம் 110 அணுகுண்டுகள் இருக்கின்றன. ஆனால், அவசியம் கருதிக் கூட எந்த நாடும் அணுகுண்டு தயாரிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அதற்காக, 1968_ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க உருவாக்கியது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.
ஆனால், இப்போது அமெரிக்கா நீட்டும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அணுகுண்டு சோதனை செய்யும் உரிமையை இந்தியா இழந்துவிடுகிறது. இதனை, `குளிக்கப்போய் சேற்றைப் பூசிவரும் செயல்' என்று உடன்பாட்டை அறிந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இடதுசாரிக் கட்சிகளுடன் தெளிவு ஏற்படாமல் அணுசக்தி ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று சென்ற ஆண்டு மன்மோகன் சிங் அரசு உறுதி அளித்தது. ஆனால், இப்போது அந்த ஆணையத்துடன் உடன்பாடு காண பிரதமர் அவசரப்படுகிறார்.

அந்த ஆணையத்துடன் உடன்பாடு ஏற்பட்டாலே அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நிறைவேறிய மாதிரிதான். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் அணுசக்திக்கான மூலப் பொருள் விநியோகம் செய்யும் நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட அமெரிக்காவே வழி செய்துவிடும். அதன்பின்னர், அமெரிக்க அணுசக்தி உடன்பாடு சிம்மாசனம் ஏறிவிடும். அதன் பின்னர் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்க நலன்களோடு இணைந்து போக வேண்டும். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு உடன்பாடு என்ற பெயரால் இந்தியாவை ராணுவக் கூட்டணியில் இழுத்து விடும் வேலை நடைபெறும். எனவே, அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மேடுபள்ளங்களைச் சுட்டிக்காட்டி நமது அணு விஞ்ஞானிகளே எச்சரிக்கிறார்கள்.

ஆனால், அமெரிக்கா விதித்த காலக் கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, எவர் எச்சரித்தாலும் கவலைப்படாமல் அமெரிக்க நலன்களைக் காக்க மன்மோகன் சிங் தயாராகி வருகிறார். இன்னொரு பக்கம் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேகம் பெற்று வருகிறது. புஷ்ஷின் குடியரசுக் கட்சி புஸ்வாணமாவது உறுதிப்பட்டு வருகிறது. காரணம், தமது சாதனை என்று பெருமையோடு புஷ் சொல்லிக் கொள்ள முடியவில்லை. `இந்தியா அணுகுண்டுச் சோதனை செய்வதைத் தடுத்துவிட்டேன். அதற்குத்தான் அணுசக்தி உடன்பாடு' என்று சொல்ல புஷ் பெரும்பாடுபடுகிறார். அவரைக் காப்பாற்ற அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட மன்மோகன் சிங் அரசு தயாராகிவிட்டது.

அதே சமயத்தில் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கினாலும் ஆட்சியில் நிலைத்திருக்க முலாயம் சிங் யாதவுடனும் குட்டிக் கட்சிகளுடனும் பேரங்கள் நடைபெறுகின்றன.நம் தேசத்தை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்கு எத்தனை பிடிவாதம் பாருங்கள்!

1 comment:

நட்புடன் ஜமால் said...

கபூர் நலமா.

இன்னும் எழுதுங்கோ.